 யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 
விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இத் தகவலினால், மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை நடைபெறும் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் சூழ்ந்துள்ளனர். கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே, இச்சம்பவத்தின் மூலம் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று குறித்த மாணவர்களின் மரணத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறுவதால் வைத்தியசாலையின் வளாகத்தில் பதற்றமான நிலை காணப்படுகின்றது.
பல்கலைக்கழ மாணவர்கள் உயிரிழப்பிற்கு சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளார்கள்.
