வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கும் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்த்தினால் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளுக்கு ரூபா 50,000 பெறுமதியான புத்தாடைகளும் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல விசேட தேவைக்குரிய மாணவர்களின் நடனக்குழுவுக்கு ரூபா 30,000 பெறுமதியான புத்தாடைகளும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக கடந்தகால யுத்தத்தின்போது முற்றாக பார்வையிழந்த 34 பெண்களுக்கு வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள அதேவேளை வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக விசேட தேவைக்குரிய மாணவர்களுகளின் நடனக்குழுவிற்கான புத்தாடைகள் இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளின்போது வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் திரு. சண்முகநாதன் மயூரன் அவர்களினால் பயனாளிகளுக்கான புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதற்கான நிதி அனுசரணையினை புலம்பெயர் உறவுகளான லண்டனைச் சேர்ந்த செல்வி அகிதயா மோகன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் பெற்றோரும் மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யோகராஜா கணேஸ்குமார் ஆகியோரும் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)