bavan..0(விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல்)
ஒரு வருடகாலத்திற்குள் எதனை சாதிக்கப் போகிறீர்கள்?
எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சைப் பொறுத்தவரை இருக்கின்ற ஒரு வருடகாலத்துக்குள் புதிதாக திட்டங்களை ஆரம்பித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு போதியதாக இல்லை. எனவே நடந்துவருகின்ற சிறந்த திட்டங்களை இனங்கண்டு அவற்றை மேலும் வினைத்திறன் கூடியதாக முன்னெடுத்துச் செல்வதே சிறப்பாக இருக்கும். எனவே கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுக்கப்பட்டு செயற்பட்டு வருகின்ற தரமான – எங்களுடைய மக்களுக்கு பயன்தரும் வகையில் சென்று கொண்டிருக்கும் திட்டங்கள், வேலைகள் மேலும் வினைத்திறனுடன் கொண்டு செல்லும் வகையில் என்னுடைய பணிகள் அமையும்.

மாகாண சபையினுடைய அதிகாரங்கள் சபையின் செயற்பாடுகளுக்கு போதாது என்ற நிலையில் உங்களுடைய பணிகளை எவ்வாறு முன்னெடுக்கவுள்ளீர்கள்?

மாகாணத்திற்கான அதிகாரங்கள் போதாது என்பதுடன், இருந்த அதிகாரங்கள் பலவற்றை மிண்டும் மத்திய அரசு மீளப்பெற்றது என்பது வரலாறு. அதைவிட இருக்கக்கூடிய அதிகாரங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தால் மத்திய அரசம் ஏனைய சில சக்திகளும் ஏற்படுத்துகின்ற முட்டுக்கட்டைகள் என பல விடயங்கள் மாகாண சபைக்குள் இருக்கின்றன. 

இருந்தாலும் மக்களுக்காக செய்யப்பட வேண்டிய வேலைகள், திட்டங்கள், நிவாரணங்கள் போன்றவற்றை முரண்பாடற்ற முறையில் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்தவகையில் என்னுடைய இந்த ஒரு வருட பயணத்தில் எங்களுடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள், திட்டங்கள் தொடர்பில் பொறுமைகாத்து பேச வேண்டிய தலைவர்களுடன் பேசி பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை எடுப்பேன்.

வடக்கில் நிலவும் தமிழ் தலைமைகளுக்கிடையிலான அரசியல் குழப்பநிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தமிழர்களுடைய பிரதேசங்களில் தமிழர்களுடைய நிர்வாகம் சிறப்பாக நடந்துவிடக்கூடாது என்பதற்காக பேரினவாத சக்திகள் தீட்டும் சதி முயற்சியாகத்தான் இன்று வடக்கில் நடக்கும் குழப்பத்தை நான் பார்க்கிறேன். ஆதற்காகத்தான் பேரினவாத சக்திகள் பலவற்றுக்கு முட்டுக் கட்டைகளை போட்டு வருகின்றார்கள்.
அதேபோல எங்களுடைய அரசியல் குழப்ப நிலைக்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அதாவது எங்களுக்குள் இரண்டு விதமான அரசியல் நோக்கர்கள் இருக்கின்றார்கள். 
ஒன்று தமிழர்களுடைய போராட்டத்துடன் மிக நீண்டகாலமாக ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டிருப்பவர்கள். மற்றவர்கள், குறுகிய காலத்திற்குள் அரசியலுக்குள் வந்திருக்கின்ற அதேவேளை, அவர்களிடம் தமிழர்களுடைய போராட்ட அனுபவம் எதுவும் இல்லாததுடன், தூர நோக்கற்ற தன்மை காணப்படுகிறது. இந்த இரு விடயங்களுக்குமிடையில்தான் முரண்பாடுகள் காணப்படுவதுடன், முரண்பாடுகளுக்கும் இவை காரணங்களாக அமைகின்றன. 
இன்று அரசியலுக்குள் நுழைந்த பலருக்கு தமிழ் மக்களுடைய நீண்ட போராட்டத்தினுடைய அர்ப்பணிப்பு, அதன் வலி என்பவை பற்றி தெரியாது தலைமைத்துவ மட்டத்தில் இருப்பதே எங்கள் மத்தியில் காணப்படுகின்ற முரண்பாடுகளுக்கு காரணமாக இருப்பதாக நான் கருதுகிறேன். 
(நன்றி தினக்குரல் – 27.08.2017)