முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை ஒன்று கடந்த 20ம் திகதி முன்னெடுக்கப்பட்டு, முடிவுறாத நிலையில் இன்று மீண்டும் தோண்டுவதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் புதுக்குடியிருப்பு பொலிசார், நீதிபதி, அரச அதிகாரி, படைஅதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் பிற்பகல் 2 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்கள் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை.மொத்தமாக 8 மணித்தியால அகழ்வு நடவடிக்கை பொலிசாருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இறுதியில் அந்த குழியை மூட உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புலிகளால் நிலத்தடி அகழியில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

போர் நடைபெற்ற காலத்தில் குறித்த தனியார் கணியில் புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளது என்றும் அதன்படி நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி ஒன்று அமைத்து அதில் பெறுமதியான நகைகள் புதைத்து வைத்துள்ளதாகவும் கூறி குறித்த பகுதியை தோண்டுவதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிசார் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி குறித்த பகுதியில் கடந்த 20ம் திகதி அன்று பிற்பகல் 2.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை சுமார் 2 மணித்தியாலங்கள் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டதுடன், நேரம் போதாமை காரணமாக தோண்டும் பணிகள் இன்றைய நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.