தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டுவரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “மே முதலாம் திகதி வழமைபோல் பொது விடுமுறையை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையில் ஏற்படும் அநீதியான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் முறையான பதவி உயர்வு இன்மை, சம்பள முரண்பாடு. நிலுவை சம்பளம் வழங்கப்படாமை எமது சம்பளத்தை எமக்கு தெரியாமல் திருடுதல், ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை தலையில் சுமத்துதல், மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் தரத்திற்கு இணைக்கப்படாமை, இலவச கல்வியை இல்லாமல் செய்வதற்கு அரசு எடுக்கும் முயற்சி, மாணவர்களுக்கு சிறந்த கல்வி கூடங்கள் இன்மை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.