யாழ்ப்பாணத்தில் பதிவாகும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.

வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் வன்முறைகளுடன் நேரடியாக தொடர்பு படாதவர்களும் இருப்பதாகவும், பூரண விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவடைந்துள்ளன என்றும் சிரேஷ்ட காவற்துறை பிரதி மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைகளை குறைக்கும் நோக்கில் பல சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் காவற்துறையினருக்கு தெரியப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு விசேட தொடர்பிலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக வன்முறைகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் தினங்களில் மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் காவற்துறை அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.