இலங்கை அரசாங்கமும், ஐ.நா சபையும் வடகிழக்கு மகாணங்களை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி இன்றுகாலை திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியானது, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது.இப் பேரணியில் கலந்துகொண்டவர்கள், அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. தொடர்ந்தும் எங்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஜனாதிபதியும், நல்லாட்சி அரசும் ஈடுபடாது காணாமல்போன எமது கணவன், பிள்ளைகள், உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது இல்லாது போனதற்கான காரணங்களை விரைவில் வெளியிடுவதுடன் இந்த கண்ணீர் போராட்டத்திற்கான முடிவையும் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டே குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.