ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 05.11.2018 மாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விளக்கிக் கூறிய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான ஏற்கமுடியாத செயற்பாடாகும். இந்த செயற்பாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் யாதெனில், மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சந்தித்தபோது, அவரிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார். இதில் அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர வேண்டும், ஆகக்குறைந்தது 2000ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான வரைவை முன்nனெடுக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமற்போனோர் போன்றவற்றுக்கான உத்தரவாதம் எழுத்துமூலம் தரப்பட வேண்டும்.

ஏனெனில் தங்களுடைழய கடந்தகால செயற்பாடுகள் எங்களை நம்பவைக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலுரைத்த மகிந்த ராஜபக்ச, தான் இப்போது வந்திருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அல்ல என்றும், அடுத்த தேர்தலுக்குப் பின்பு இவ்விடயங்கள் பற்றி சிந்திப்போம் என்றும் கூறியிருந்தார்.

ஆயினும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அந்நடவடிக்கையில் ஒரு தேக்கநிலையை உருவாக்கியுள்ளது. ஆனாலும் அதை தொடர்ந்து அவர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தற்போதைய அரசியல் மாற்றம் சட்டத்திற்கு விரோதமான ஒரு விடயம் என்பதால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிக்க முடிவுசெய்துள்ளோம்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் எமது கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்தது கட்சிக்கோ தலைமைக்கோ தெரியாது. அவர் கனடாவில் இருந்தபோது பல தடவைகள் தொடர்புகொண்டு கதைத்தபோதும் அப்படியொரு நிலைப்பாட்டினை எடுப்பார் என்பதை நம்பவில்லை.

அவர் மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ளதால் அவரைக் கட்சியில் இருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும், தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இக்கருத்துக்கள் ஆலோசனைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்று கூட்டம் நிறைவுபெற்றது.