மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய தமிழருவி 2018 இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்றுமாலை 3.00மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மொரட்டுவை பல்கலைக்கழக உபவேந்தர் K.K.C.K பெரேரா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து இசை நிகழ்வுகள் நடைபெற்றன. மூதரிஞர் சொக்கலிங்கம் நினைவுகள், மலையக கிராமமொன்றின் நிலைமைகள், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் திறன்கள் தொடர்பான பல்வேறு காணொளிகள் காண்பிக்கப்பட்டன.

தொடர்ந்து ஒளிச்சுவடி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மூதறிஞர் சொக்கலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப் பரிசில்களும், கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு, விருந்தினர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் இன்றைய அரசியல் மாற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களது செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்ற தலைப்பில் மக்கள் மன்றமும் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.