உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்பட்டதனால் நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீறியுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.