வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபுலானந்த கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

அதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். அதன் பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணினி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த தீ பரவலால் கணினி அறையில் இருந்த கணினிகள் மற்றும் கதிரைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.