Header image alt text

ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துள்ளார். சிவராத்திரி தினமான நேற்று தாம் அவரை சந்தித்தமை ஆசீர்வாதமாக அமைந்திருந்ததாக, அலைனா டெப்லிட்ஸ் தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 273 தோட்டாக்களும் விமான தாக்குலுக்கு பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 73 தோட்டாக்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more

கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவருகிறது. இவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். Read more

வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பஸ்கள் உட்பட பல வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்வதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக் கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. Read more

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கை குறித்து ஏற்கனே தயாரிக்கப்பட்ட பிரேரணையின் நகல் வரைவு ஆராயப்படவுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை இலங்கை எதிர்க்குமாயின் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். Read more

17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.

மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார். இதேவேளை திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட இதனை தெரிவித்துள்ளார். Read more

சகல அரசியல் கட்சிகளினதும் வருடாந்த கணக்கறிக்கை, கொள்கை பிரகடனம் மற்றும் கட்சியின் யாப்பு என்பவற்றை வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகளையும் தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான கேள்வி நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more