சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 லட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து முதன்முதலில் சென்றவரெனக் கருதப்படும் மொஹமட் முஹூசித் இஷாக் அஹமட் மற்றும் அவரது சகோதரரான சர்ஃபாஸ் நிலாம் ஆகிய இருவரும் மற்றொரு இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகிய மூவரும், இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர் என்றும் அப் பணத்தில் ஒரு பகுதி, தெஹிவளை பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவ் விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.