வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

32454545நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டு, தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தினார்கள். இதன்போது போராட்டக்காரர்கள், வடமாகாணத்தில் 2300ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள். கடந்த அரசாங்கத்தினால், முகாமைத்துவ உதவியாளர்களாக பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடமாகாண அமைச்சுக்களின் கீழ் புதிய ஆளணி வெற்றிடங்களாக 1478 பேரின் விபரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்த அனுமதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை அந்த வெற்றிடங்களுக்குள் உள்ளீர்ப்புச் செய்ய வேண்டும். வடமாகாணத்தில் போரின் வடுக்களை தாங்கிய பல பட்டதாரிகள் வேலை வாய்ப்பில் உள்ளீர்ப்பதற்குரிய வயதெல்லையின் விளிம்பில் நிற்கின்றனர். இன்னும் காலம் இழுத்தடிக்கப்படுமானால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியானதாகவே அமையும். எனவே, தமது நிலைமைகளை உணர்ந்து உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்போது, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஸர் ஒன்றிணையும் அவர்கள் கையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.