சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி நடைப்பயணம்-

sivajiஇலங்கையின் போர்குற்றம் மற்றும் இன அழிப்புக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக பொறிமுறையினை நிராகரித்து, சர்வதேச விசாரனையினை வலியுறுத்தவும் இதனை தமிழ் மக்களிடையே எழுச்சி பெறச்செய்யவும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடைப்பயணம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன் ஆரம்பமாகி 5 நாட்களில் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் முடிவடையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதம் இன்றி யாவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு அழைப்பு விடுக்கின்றேன். இது கட்சி சார்ந்த தேவை அல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தேவை.

இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பனர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருடனும் தொடர்பு கொண்டுள்ளேன். இதுவரையில் அனந்தி சசிதரன் இதற்கு பூரண ஒத்துழைப்பு தருவதாக கூறயுள்ளார். எனவே, யாரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தரலாம். இது நம்மால் கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டிய ஒரு விடயம். இம்மாதம் 14ஆம் திகதி ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் சர்வதேச விசாரணை தொடர்பில் இலங்கையிடம் அறிக்கையும் கையளிக்கப்படவுள்ளது. இதில் உள்ளக பொறிமுறையினை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவுள்ளதாக கருத்துக்கள் கூறப்படுகின்றது. இது தற்போது பெரும் சர்ச்சையாக பேசப்படுகின்றது. சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்று சிலரால் கூறப்படுகின்றது. அப்படியானால் ஏன் உள்நாட்டு விசாரணை? ஆகவே, சர்வதேச விசாரணை முடிவடையவில்லை. தற்போது வெளிவரவிருப்பது சாட்சியங்களின் தொகுப்பு. எனவே, நாம் சர்வதேச தீர்ப்பாயத்தையே கேட்கின்றோம். இதுதான் நாம் அடுத்தகட்டத்துக்கு செல்லகூடிய வாய்ப்பு. இதைவிட்டு யாரும் உள்நாட்டு விசாரணை என்று மக்களை திசை திருப்ப வேண்டாம். கோழி முட்டை போட்டவுடன் குஞ்சு வெளிவருவதில்லை. அடைகாத்து முட்டையில் கோழி கொத்திய பிறகே குஞ்சு வெளிவருகின்றது. அதுபோல் தான் அழுத்தம் இன்றி எதுவும் இடம்பெறமாட்டாது. எமது நாட்டில் உள்நாட்டு விசாரணை சரிவராது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆயுதக்களஞ்சியத்துக்கு இன்று என்ன நடந்தது? எதுவுமில்லை. பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, சட்டமா திணைக்களத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார். ஆகவே, ஈழமக்கள் சர்வதேச விசாரணையினை நோக்கி பயணிக்கவேண்டும் என்றார்.