?????????????????????????????????????????????????????????

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிள்ளையான்காடு இந்து மயானத்தில் நடைபெற்று வந்த அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரியும், குறித்த மயானத்தைப் பயன்படுவதற்கு அனுமதிக்குமாறுகோரியும் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று உடுவில் பிரதேச செயலகம் மற்றும் வலி. தெற்குப் பிரதேச செயலகத்திற்குச் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றுக்காலை உடுவில் பிரதேச செயலகத்திற்குச் சென்ற பொதுமக்கள் உடுவில் பிரதேச செயலர் எஸ்.நந்தகோபாலனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது மயானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர். வலி. தெற்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான குறித்த மயானக் காணி முன்னர் பெருமளவில் விஸ்தீரணமானதாக இருந்து வந்துள்ள நிலையில் 1969ஆம் ஆண்டளவில் மயானக் காணி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நூற்றுக் கணக்கான மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் மயானக் காணியின் நிலப் பரப்பு முன்னரிருந்ததை விடப் பல மடங்கு குறைவடைய வேண்டியேற்பட்டது.

தற்போது மயானக் காணியாகச் சுருங்கிக் காணப்படும் காணிக்குள் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த மக்கள் இறந்த தமது உறவுகளின் உடல்களை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து வருகின்றனர். எனினும், குறித்த காணிக்குள் இந்த வருட ஆரம்பத்தில் அப் பகுதி மக்களில் சிலர் புதிதாகக் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடாத்தியதுடன், கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

எனினும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இறந்த தமது உறவுகளின் உடல்களைத் தகனம் செய்ய மயானத்தை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் மக்கள் காவிச் செல்லும் போது அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் அடிக்கடி இரு தரப்புக்குமிடையில் சச்சரவுகளும் இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் மைத்திரி அரசாங்கத்தின் கிராமத்திற்கு ஒரு மில்லியன் திட்டத்தின் கீழும், வலி. தெற்குப் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மயான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. எனினும், அபிவிருத்திப் பணிகள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்று வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மயானத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு மயானத்தை அண்டியுள்ள மக்கள் முட்டுக் கட்டையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மயானத்தின் அபிவிருத்திப் பணிகள் கடந்த பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உடுவில் பிரதேச செயலரின் அறிவுறுத்தலின் பேரில் ஜே-208 புன்னாலைக்கட்டுவன் வடக்குக் கிராம சேவகரதும், அப்பகுதிப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரதும் மேற்பார்வையின்கீழ் மயான அபிவிருத்திப் பணிகளுக்குச் சென்ற ஒப்பந்தக்காரர்கள் தங்களது வேலையைத் தொடர்ந்தும் செய்ய விடாது தடுத்ததுடன், அப் பகுதியைச் சேர்ந்த சிலரும் முறுகலில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் கிராம சேவகரையும் அநாகரிகமான வார்த்தைகளால் ஏசியுள்ளனர். இதனையடுத்து மயான அபிவிருத்திப் பணிகளை இடைநடுவில் நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டி ஏற்பட்டது. இந்நிலையில் மயான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்தமைக்கு எதிராக உடுவில் பிரதேச செயலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றைய தினம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் பின்புலமே உரிய நடவடிக்கை எடுக்கப் பின்நிற்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். உடுவில் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்களுக்கும், உடுவில் பிரதேச செயலருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடுவில் பிரதேச செயலர் இந்த விடயம் தொடர்பில் வலி.தெற்குப் பிரதேச சபையின் செயலாளருடன் இந்த விடயம் தொடர்பில் கதைத்து முடிவு சொல்லுவதாகத் தெரிவித்துள்ளார். வலி. தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கொழும்பிற்குச் சென்ற காரணத்தால் அங்கு நின்ற குறித்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதேச சபையை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமலும் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதுடன், நிலைமை கைகலப்பு உருவாகும் நிலை வரை சென்றுள்ளது. இதனால், பிரதேச சபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு நின்ற உடுவில் பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சீற்றமடைந்த மக்களுடன் சமாதானம் பேசி நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து பிரதேச சபையினருக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சுன்னாகம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகப் பிரதேசசபை தரப்பால் உறுதி மொழி அளிக்கப்பட்டதையடுத்துப் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றுள்ளனர்.

?????????????????????????????????????????????????????????

?????????????????????????????????????????????????????????