sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்படையாகக் கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில், தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும், அன்டோனியோ குட்டரஸ{க்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. ஏகமனதாக இடம்பெற்ற அவரது தெரிவானது, அவர் மீதான நம்பிக்கைக்கு ஓர் ஆதாரமாகும் எனவும், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“புதிய நியமனத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்ற அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்டையாக கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில், தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக வெளிச்செல்லும் செயலாளர் நாயகம் முன்னெடுத்த பணிகளை, புதிய செயலாளர் நாயகம் தொடர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வலியுறுத்த விரும்புகிறது.

இலங்கையில் கூடிய சீக்கிரத்தில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்தைக் கொண்டுவரும் நோக்கில், புதிய செயலாளர் நாயகத்தோடு இணைந்து செயலாற்றுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்” அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.