battiஇலங்கையில் போர்க் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போருக்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம்காணப்பட்ட 6 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு தற்போது நிலக் கண்ணி வெடி அபாயமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நிலக்கண்ணி நடவடிக்கைக்கான மத்திய மையத்தினால் மாவட்ட செயலாளார் பி.எம்.எஸ். சார்ள்ஸிடம் இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது.

இதில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, சா. வியாழேந்திரன், பிரித்தானிய, அமெரிக்கா, அவுஸ்திரேலியா தூதுவர்கள் மற்றும் ஜப்பான், கனடா தூதவராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 160 சதுர கிலோ மீற்றர் தூரம் நிலக் கண்ணி வெடிகள் பரவி இருப்பது தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பில் 134 சதுர கிலோ மீற்றர் தூரம் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், 26 சதுர கிலோ மீற்றர் தூரம் மட்டுமே இன்னும் அகற்ற வேண்டியிருப்பதாகவும் 2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடி அபாயமற்ற நாடாக மாற்றுவதே இலக்கு´´ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை அம்பாறை, அனுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில்தான் இன்னமும் அகற்ற வேண்டியிருக்கின்றது.

´´இலங்கையில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அரசினால் 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியும் சர்வதேச நிறுவனங்களினால் 10 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டுள்ளது´´ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

´´இதுவரை மீட்கப்பட்ட 12 இலட்சத்து 76 ஆயிரத்து 898 நிலக் கண்ணி வெடிகளில் 57 சதவீதமானவை, அதாவது 7 இலட்சத்து 22, 029 மனிதர்களையும், 1.972 யுத்த தாங்கிகளையும் அழிக்கக்கூடியது. ஏனைய 5 இலட்சத்து 52 ஆயிரத்து 892 வெடித்து சிதறிய ஆயுதங்களின் எச்சங்கள் என கண்டறியப்பட்டுள்ளது’ என்பது போன்ற தகவல்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.