முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தை தற்போது பராமரிக்கும் இராணுவத்தின் 683ஆவது படைப்பிரிவில் பணியாற்றும் குறித்த அதிகாரி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் மரணித்த குறித்த யானை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பழச்செய்கை தோட்டத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்கு அனுமதியற்ற நிலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் மோதி யானை உயிரிழந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட குறித்த அதிகாரி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 35 வயதுடையதாக கருதப்படும் மரணித்த யானையின் தந்தம் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.