eastகிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றுகாலை 10.30 அளவில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதன்போது மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

இந்தக் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக பெரும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்து இன்று பல்கலைக்கழகம் வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மாணவர்கள் கூறியுள்ளனர்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல் காணாமல் போதல் சம்பங்கள் என வட, கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரையில் தமக்கான நீதி வழங்கப்படாதுள்ள சந்தர்ப்பத்தில் தற்போது, குறித்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.