சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நடைபயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தது-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. இதன்போது பல படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படும் செம்மணியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவி கிருசாந்தி படுகொலை மூலமே அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருந்தது. எனினும் இன்றுவரை அப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படாதிருப்பதுடன் சிலர் தப்பித்துமிருந்தனர். அப் படுகொலைகள் நிகழ்ந்த பகுதியினிலேயே நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை குறித்த நடைபயணத்தின்போது வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் அவர்களை இவர்கள் சந்திப்பதுடன், அதன் பின்னர் யாழ். சங்கிலியன் தோப்பில் குறித்த நடை பயணத்தினை நிறைவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.