ஆணைக்குழு என்று நியமிக்கப்பட்டவைகள் வெறும் கண்துடைப்பே-சுரேஸ்-

sureshஉள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக இன்றுபகல் யாழ். நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் நல்லெண்ண அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதம நீதியரசர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஐநாவில் தெரிவித்துள்ளார். இதில் எந்தவொரு விட்டுக்கொடுப்போ நல்லெண்ணமோ இல்லை. பிரதம நீதியரசர், சேவையிலும் அனுபவத்திலும் மூத்தவராக காணப்படுகின்றார். அதன் வழியாக அவருக்கு உரிய பதவி கிடைத்துள்ளதே அன்றி மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேபோல் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐனநாயக ரீதியாக கிடைத்துள்ளது. இதனைவிடுத்து உண்மைக்கு மாறாக மங்கள சமரவீர ஜநா.வில் இவைகள் எல்லாம் தாம் ஏற்கனவே நல்லெண்ண அடிப்படையிலும் விட்டுக் கொடுப்பு அடிப்படையிலும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளமையில் எந்தவித உண்மையும் இல்லை. உள்ளக விசாரணையென்று ஒன்று வருமாக இருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உள்ளக விசாரனையென்பது கிடப்பில் போடப்படுவதாகவே காணப்படும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடயத்தில் அரசினால் காலத்திற்குக் காலம் நியமிக்கப்பட்ட பல ஆணைக் குழுக்களின் நிலமையும் கூட இதுவாகும். நல்லிணக்க ஆணைக்குழ, காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் தற்போதைய நிலமை சம்பந்தமான ஆணைக்குழு என்று நியமிக்கப்பட்டவைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே காணப்பட்டுள்ளன. இன்று லட்சக் கணக்கான தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையொப்பங்களையிட்டு வருகின்றார்கள். இந்நிலையில் உள்ளக விசாரணையென்பது வெறும் கண்துடைப்பாகவே என குறிப்பிட்டுள்ளார்.