vigneswaranசுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்புவது, இப்போதைக்கு உசிதமானது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா, தமது விஜயத்துக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருந்தார். இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரிடம் கருத்து கேட் போது, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. அத்துடன் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும், அதேபோன்ற ஒரு சட்டம் ஒன்று அமுலாக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாடும் இல்லை.

மேலும் முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுமாக இருந்தால், சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பலாம். அங்குள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே எமது விருப்பம், எனினும் அதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.