tower இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கிரென்பெல் டவரில் கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேல் தளத்திலிருந்து 2வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன. கிரென் பெல் டவர் கடந்த 1974ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அடுக்குமாடி தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். 
மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்

கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.