menus islandஅவுஸ்திரேலியாவின் மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை பொறுப்பேற்குமாறு, நியூசிலாந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானஸ்தீவு ஏதிலிகள் முகாம் மூடப்பட்டுள்ள போதும், அங்கிருந்து 600 ஏதிலிகள் வரையில் வெளியேற மறுத்து வருகின்றனர். எனினும் குறித்த முகாமில் இருந்து அவுஸ்திரேலியாவின் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி இருப்பதுடன், மின்சார இணைப்பு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த ஏதிலிகளை நியூசிலாந்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று, அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் இயன் லீஸ் கலோவேய் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக நியூசிலாந்தில் இயங்கும் அமைதி செயற்பாட்டுக்கான வெலிங்டன் என்ற அமைப்பு நியூசிலாந்தின் பிரதமருக்கும் குடிவரத்துறை அமைச்சருக்கும் மனுக்களை அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.