வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, இரண்டு வருடங்களாக காணப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த 20,000 பட்டதாரிகள் ஒரு வருட பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையாளர்களாக்கப்படுவர் எனவும் அதுவரைக்காலமும் அவர்களுக்கு 20,000 ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நடத்தப்பட் நேர்முகப் பரீட்சைகளில் 57,000 வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.