D.sithadthan MPநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றத்தினுடைய ஏழாவது அமர்வுகள் கடந்த வாரம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றன. இந்த அமர்வினில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட்டினதும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், நேரடியாக அந்த அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழலில், அவர் காணொளி மூலம் உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது:

அனைவருக்கும் வணக்கம்!

உங்களுடைய இந்த அமர்வுகளிலே நேரடியாக நான் கலந்துகொள்ள வேண்டுமென்ற உங்களுடைய விருப்பத்தை நிறைவுசெய்ய முடியாதவனாக இருக்கின்றேன். நான் பங்குபெறுவதற்காக ஏற்கெனவே இங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகளை இரத்துச் செய்யவேண்டிய நிலைமை ஏற்படும் என்பதலேயே உங்கள் அழைப்பை ஏற்க முடியாத சூழலில் இருக்கின்றேன்.

இருந்தாலும், உங்களது இந்த நிகழ்வு சிறப்புற நடந்தேறுவதற்கு எமது மக்களின் சார்பாக நான் வாழ்த்துவதோடு, இங்கு தமிழ்த் தாயக பூமியிலே வாழுகின்ற எங்களுடைய மக்களின் இடர்கள் எல்லாம் தீருவதற்காக உங்களது பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வேண்டிக்கொண்டு, அரசியல் ரீதியாக ஒரு நியாயமான தீர்வு எமது மக்களுக்குக் கிடைப்பதற்காக சர்வதேசத்தின் மீதான உங்களுடைய அழுத்தங்கள் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
‘சிறீலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் – இலங்கையில் இருக்கின்ற அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வது சாத்தியமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு கருத்துரையை வழங்குமாறு நீங்கள் என்னிடம் கேட்டிருக்கின்றீர்கள்.
இந்த நாட்டின் தற்போதைய கட்டமைப்பும், அரசியலமைப்பும் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, அவர்களது அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யவில்லை என்பதுதான் – தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடு. அது எமது நிலைப்பாடு மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்துவருகின்றது. ஏன்… தென்னிலங்கை அரசியல் சக்திகள் அனைத்தினுடைய நிலைப்பாடும் கூட அதுவாகத்தான் உள்ளது. அந்த காரணத்தினாலேயே, தொடர்ந்து ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும், ஒரு புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், தமிழ் மக்களுக்குரிய ஆட்சியதிகாரங்கள் மற்றும் அவர்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளுக்கான ஒரு நியாயமான தீர்வு என்பது சம்பந்தமாகவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்ளை முன்னெடுத்து வந்திருக்கின்றன.
சந்திரிகா அம்மையாரின் காலத்தில் கூட ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பின்பு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கூட, வட்டமேசை மகாநாடு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியான பேச்சுவார்த்தைகள் என்பன முன்னெடுக்கப்பட்டன. அது மாத்திரமல்லாமல் – யுத்தத்தின் முடிவுக்குப் பின்பு ஐக்கிய நாடுகள் சபையுடைய மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் அனைத்திலுமே – தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றின் அர்த்தம் என்னவெனில்  – இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு தமிழ் மக்களுடைய அரசியற் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்கவில்லை என்பதை அனைத்துத் தரப்புக்களுமே ஒப்புக்கொள்கின்றாhர்கள் என்பதாகும். நான் கூறுவது என்னவெனில், இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தையும் கூட உட்படுத்தித்தான் இந்த நிலைப்பாடு உள்ளது. ஆகவேதான், இப்போது ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில்தான் தற்போதைய கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். தமிழர்களால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது கூட – புதிய அரசியமைப்பு ஒன்றின் ஊடகத் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது தான்.
தற்போது – இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அந்த வழிநடத்தல் குழுவின் கீழே ஆறு உப குழுக்கள் ஒவ்வொரு விடயமாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதிலே முக்கியமான ஒரு குழு, மத்;திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான  ஆட்சிமுறைப் பங்கீடு தொடர்பாக ஆராய்ந்து தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நிறுவப்பட்டது. அந்த உப குழுவின் தலைவராக நான் இருந்திருக்கின்றேன்.
அந்த உப குழுவில் பணியாற்றிய எனது அனுபவத்தின் அடிப்படையில் – அந்த குழுவின் நடவடிக்கைகளின் போது, அந்த குழுவிலே உறுப்பினர்களாக இருந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையீனத்தையும், விருப்பமின்மையையும், ஒத்துழைக்காத தன்மையையும் நேரடியாகக் கண்ணுற்ற போது எனக்கு மீண்டும் நம்பிக்கையீனமே ஏற்பட்டது. அதே நேரத்தில், தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் புதிதாக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள இளம் அரசியல்வாதிகளோடு – அவர்களோடு எனக்கிருக்கும் நீண்ட காலப் பழக்கத்தின் அடிப்படையில் – சகஜமாகக் கதைக்கின்ற போது – புதிய அரசியலமைப்பு உருவாக்குகின்ற நடவடிக்கைகளிலே எனக்குத் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இல்லாமலேயே இருக்கின்றது.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் தற்போதைய நடவடிக்கை ஒர் இலக்கை அடையும் என்றோ, இந்த முயற்சி வெற்றி பெற்றுத் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் என்றோ, குறிப்பாக – கடந்த காலத் தேர்தல்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ச்சியாக முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டபடி – தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே – இணைந்த வட-கிழக்கு தமிழ் மக்களுடைய தாயக பூமி என்ற அங்கீகாரத்தின் அடிப்படையிலே – சமஸ்டி முறையிலான ஒரு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டு – எங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்றோ நான் நம்பவில்லை. 
இது தொடர்பாகப் பேசப்பட்ட கடைசிச் சந்தர்ப்பமாக அண்மையிலே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்த நிகழ்வைக் குறிப்பிடலாம். அந்தச் சந்திப்பின் போதுகூட, மிகத் தெளிவாக – வட-கிழக்கு இணைந்த தாயகப் பூமி சம்பந்தமாகவும், சமஸ்டி ஆட்சிமுறை சம்பந்தமாகவும் எங்கள் தரப்பிலே இருந்து எடுத்துச் சொல்லப்பட்டது. எமது தலைவர் சம்பந்தன் அண்ணர் அதனை மிகத் தெளிவாக மோடி அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அது தான் எங்களுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் இறங்கி வர முடியாது. அதை விடவும் குறைவான ஒரு தீர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதுதான் இன்று இருக்கக்கூடிய நிலைமை. இவ்வாறு இருக்கின்ற போது எம்மை நோக்கிப் பல கேள்விகள் எழும்புகின்றன. இப்படியாக நம்பிக்கையீனமும் சந்தேகமும் இருக்கின்றதெனில், நாம் ஏன் தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகளில் பங்குபற்றுகின்றோம் என்றவிதமான கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்வி நியாயமானது. இதிலே முக்கியமாக இரண்டு விடயங்களைப் பார்க்க வேண்டும்.
முதலாவது – நாங்கள் கடைசிவரை முயற்சிக்க வேண்டும். சந்தேகங்கள் இருந்தாலும் கடைசிவரையும் முயற்சிக்க வேண்டும். சிங்கள பேரினவாதிகள் நிச்சயமாக இந்த நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான முயற்சிகளை எடுப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஏனெனில் – நாங்களாகவே இந்த நடவடிக்கைகளைக் குழப்பிப் பின்வாங்கி விடுவோமாக இருந்தால் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கே நாம் விடயங்களை மிக இலகுவாக்கி விடுவோம். அவர்கள் மிகச் சுலபமாக எங்கள் மீது பழிகளைப் போட்டுவிடுவார்கள். தமிழர்கள்தான் இந்த நடவடிக்கைகளைக் குழப்பிவிட்டார்கள் என்ற ஒரு பிரசாரத்தைச் சர்வதேச மட்டத்திலே மேற்கொண்டு, எங்களது உரிமைகளை அங்கீகரிக்காது விடுவதற்கான பழிகளை எங்கள் மீதே போட்டுவிடுவார்கள். புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் இந்த நடவடிக்கையிலிருந்து நாமாகவே வெளியேறினால், எங்களுக்குத் தாம் தருகின்ற ஒரு தார்மீக ஆதரவைத் தன்னும்  சர்வதேச சமூகம் மீளப்பெற்றுவிடும். எனவேதான், நாம் சற்று நிதானமாக இருக்கவேண்டியுள்ளது.
இந்த புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சிங்களப் பேரினவாதிகள் நிச்சயமாகவே குழப்புவார்கள் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகின்ற போது, அவ்வாறு அது குழம்புகின்ற போது சர்வதேச சமூகம் எங்கள் பக்கத்திலே இருக்கவேண்டும். எங்களுடைய தவறால் குழம்பியது என்ற நிலைப்பாடு இல்லாமலிருக்க வேண்டும். அப்போதுதான், இந்த முயற்சி தோல்வி அடைகின்ற போதுகூட, சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவாக இருந்து எங்களுடைய நியாயத்தை ஏற்றுக்கொள்ளும். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலே தான் நாங்கள் இந்த நடவடிக்கைகளைக் குழப்பாமல் தொடர்ந்தும் சென்றுகொண்டிருக்கின்றோம். சிங்களத் தரப்பு விரும்பினால் அவர்கள் குழப்பிக் கொள்ளட்டும். அதற்கு நாங்கள் எதுவுமே செய்யமுடியாது. இந்த முயற்சிகளின் முடிவை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த விடயம் ஒருபுறத்தில் தொடருகின்ற நேரத்திலே – புதி;ய அரசமைப்பு ஒன்றின் ஊடாகத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சிகள் தொடருகின்ற நேரத்திலே – அதே அளவு முக்கியத்துவம் மிக்க இன்னொரு விடயத்திலும் நீங்கள் முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும் என்று, உலகு எங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களாகிய உங்களிடம் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
எங்களுடைய மக்கள் மிகப்பெரிய அழிவுகளை சந்தித்து என்ன செய்வது என்று தெரியாத நிர்க்கதி நிலையில் வாழ்கின்றார்கள். அவர்களுடைய பொருளாதார வாழ்வு மீளக் கட்டியெழுப்பப்பட்டு அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்கக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு – மிகப் பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகள் இங்கு செய்யப்பட வேண்டும்.
புலம் பெயர்ந்து வேறு நாடுகளிலே வாழக்கூடிய எங்களுடைய உடன்பிறப்புக்கள் பலர் சிறிய சிறிய அளவிலே இங்குள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். மெச்சுகின்றோம். அதே நேரத்தில், பலர் தங்களுடைய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பண உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுகூட ஓர் தேவையான விடயமாகத்தான் இருக்கின்றது. இருந்தபோதும், நீங்கள் இன்னும் அதிக ஈடுபாட்டோடு செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் உடனடியாக அடுத்த கேள்வி கேட்பீர்கள், யாரை நம்பி காசு கொடுப்பது என்று. நீங்கள் யாரையும் நம்பி காசு கொடுக்கவேண்டாம். நீங்களாகவே இங்கு பொருளாதார முதலீடுகளைச் செய்யுங்கள். வேலை வாய்ப்புக்களை உருவாக்குங்கள். அவ்வாறு செய்வதன் மூலம்தான் மீண்டும் ஒரு ஆரோக்கியமான தமிழ் சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்.
அநேகமாக நீங்களும் அறிந்திருப்பீர்கள். இங்கு ஏராளமான சமூக சீர்கேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளை நான் விபரிக்க வேண்டிய தேவையில்லை. இவைகள் எல்லாமே இந்த வேலையில்லா திண்டாட்டத்தால் வரக்கூடிய விடயங்கள். இதனைத் தீர்ப்பதற்கு நீங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலமையும் என்னிடம் ஆகக் குறைந்தது 25 அல்லது 30 இளைஞர்கள் தமக்கு வேலை எடுத்துத் தருமாறு கேட்டு வருவார்கள். ஆனால், அதனை எங்களால் செய்ய முடியாமல் இருக்கின்றது. இந்த வேலையில்லா திண்டாட்டம்தான் அடிப்படையிலே இங்கிருக்கக்கூடிய சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக நான் பார்க்கின்றேன். ஆகவே, புலம்பெயர் தமிழர்கள் உங்களால் இயன்ற அளவிற்கு எங்களுடைய பகுதிகளில் முதலீடுகளைக் செய்ய வேண்டும். அiனை நீங்கள் ஒரு வியாபார நோக்கத்துடன் கூடச் செய்யலாம். அல்லது ஒரு சேவை ரீதியானதாகவும் செய்யலாம். ஏதோ ஒரு ரீதியிலே உங்களுடைய முதலீடுகளைச் செய்து இங்கு எமது இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை நீங்கள் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
எமது இளைஞர்களுக்கான உத்தரவாதம் மிக்க தொழில் வாய்ப்புக்களை நாங்கள் உருவாக்கத் தவறுகின்றபோது, அவர்கள் அரசாங்க வேலைகளுக்காகக் காத்திருக்கின்றார்கள். அந்த இடைவெளியில் – வடக்கு கிழக்கிலே வேறு சமூகத்தவர்கள் வந்து தொழில்களை ஆரம்பித்துச் செய்கின்ற நிலைமைகளை நாங்கள் நேரடியாகப் பார்க்கின்றோம். அது தவறு என்பதற்காக நான் கூறவில்லை. ஆனால், எங்களுடைய மக்களுடைய, எங்களுடைய இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன. ஆகவே தான், நீங்கள் இயன்றளவிற்கு இங்கு உங்களுடைய முதலீடுகளைச் செய்து பொருளாதார அபிவிருத்தியை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி எங்களுiடைய மக்களைத் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய – தம்முடைய காலிலே நிற்கக்கூடிய – ஒரு சமூகமாக உருவாக்க வேண்டியது கட்டாயமான தேவையாக உள்ளது. நிச்சயமாக இது உங்களுடைய கடமையாக உள்ளது. ஏனென்றால் அது உங்களால்தான் முடியும். இங்கிருக்கின்ற எங்களால் ஒரு எல்லைக்கு மீறி அதனைச் செய்ய முடியாது.
அடுத்ததாக, போரின் போது காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினை, அரசாங்கப் படையினர் பிடித்துவைத்திருக்கின்ற காணிகள் தொடர்பான பிரச்சினை தொடர்பாகவும் நீங்கள் காத்திரமான பங்களிக்க முடியும். இவ்வாறாக இலகுவில் செய்யக்கூடிய விடயங்களைக் கூட – நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்போ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ தேவையில்லாத விடயங்களைக் கூட இந்த அரசாங்கம் செய்யவில்லை. இந்த விடயங்களைத் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றது. அது மட்டுமல்லாது, காணி விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்திடம் சென்று பேசுமாறு நிலைமையை ஏற்படுத்துகின்றது. நாங்கள் இராணுவ முகாம்களுக்குச் சென்று அங்கிருக்கும் தளபதிகளோடு பேச வேண்டியுள்ளது. அதாவது – எமது மக்களின் அன்றாட வாழ்வு தொடர்பான விடயங்களைத் தீர்மானிக்கும் விவகாரங்களில், இந்த ஜனநாயக நாட்டிலே இராணுவமும் இப்போது ஒரு சமமான தரப்பாக மாற்றப்படுகின்றது. புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்ற வேளையில் – எங்களுடைய பிரச்சினையில். இவைகள் எல்லாம் ஒரு நல்ல அறிகுறிகள் அல்ல.
ஆகவே, இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய விடயங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் உங்களுடைய நாடுகளிலே இருக்கக்கூடிய உங்களுடைய அரசாங்க பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களைத் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். புதிய அரசமைப்பை வெற்றிகரமாக உருவாக்குகின்ற பயணத்திலே, இப்படியான பிரச்சினைகளையும் தீர்த்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். உங்கள் உங்களது நாட்டு அரசாங்கங்கள் மூலமாக, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொடுக்கக்கூடிய ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். நீங்கள் அதை ஏற்கெனவே  செய்துகொண்டுதான் இருக்கின்றீர்கள். அதை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்றே கேட்கிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் எங்களுடைய மக்களுக்கு ஒரு நியாயமான விடிவை நீங்கள் தேடித்தர முடியும் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.