மனித உரிமைகள் சார்ந்த தங்களின் பரிந்துரைகள் பல அமுலாக்கப்படவில்லை என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீபிகா உடகம இதனை ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.

தங்களால் முன்வைக்கப்பட்ட 40 சதவீதமான பரிந்துரைகளை அரசாங்கம் இன்னும் அமுலாக்கவில்லை. அதற்கு இலங்கையின் சட்டத்துறை கலாசாரமே காரணமாகும். இலங்கையில் தண்டனைகள் இல்லாத பட்சத்தில், சட்ட ஒழுங்குகளை சமுகத்தில் பரவச் செய்வது சிரமம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், காவற்துறை தடுப்பு முகாம்களில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் இலங்கையில் 5 ஆயிரத்து 614 மனித உரிமைகள் சார்ந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் ஆயிரத்து 174 முறைபாடுகள் காவற்துறை தடுத்து வைப்பின்போது இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பானவை என்றும் தீபிகா உடகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.