1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 44ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இன்றுகாலை யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21),

இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர். இவர்களின் நினைவாக யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் வருடாவருடம் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.