கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞரை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, கதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

பின்னர், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.