மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் குறித்த பழமை வாய்ந்த இடிபாடுகளுடன் காணப்படுகின்ற கட்டிடத்தில் இருந்து சுமார் 500 மீற்றருக்குள் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை பலவந்தப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தாம் இடம்பெயர்ந்து சென்று பின் மீண்டும் தமது கிராமத்தில் வந்து மீள் குடியேறியுள்ளதாகவும் யுத்தத்தின்போது தமது வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது தாம் புதிய வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்ற நிலையில் தம்மை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை நாளாந்தம் பலவந்தப்படுத்தி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தற்போது தமது வீட்டு வளாகத்தினுள் பயண்தரும் மரங்களை நாட்டவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ள போதும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே உரிய அதிகாரிகளும், அரசியல் வதிகளும் குறித்த விடயத்தில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.