இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று, சங்க தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தின் போது, செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்க தொண்டர்கள் பாராட்டப்படவுள்ளனர். கொடுப்பனவு எதனையும் எதிர்பாராத நிலையில், இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் நாடளாவிய ரீதியாக பணியாற்றுகின்றனர்.இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வருடாந்தம் சுமார் 3 லட்சம் மக்களுக்கு தமது இடர்கால சேவையினை ஆற்றி வருகின்றது.

குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் உட்பட அவசர காலத்தில் பல்வேறு சேவைகளை, சங்கம் செய்து வருகின்றது. இதேவேளை, வருடா வருடம் மே 8 ஆம் திகதியினை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. மே மாதம் 8 ஆம் திகதிய செஞ்சிலுவை சங்கங்களின் ஸ்தாபகரான ஹெனறி டூனண்ட்டின் ஜனன தினம் என்பது குறிப்பிடத்தக்கது.