முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரையான இரண்டு வார காலப்பகுதி அனர்த்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்களை சீர் செய்வதற்காக பத்தாயிரம் ரூபா முற்பணமாக வழங்கப்படவுள்ளது. இதற்காக நான்கு கோடி ரூபா நிதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் துமிந்த திசநாயக்க மேலும் தெரிவித்தார்.