இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.
அங்கு அவர் நிலக்கண்ணி வெடி அகற்றும் முகமாலை பிரசேத்துக்கு சென்று பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சந்திப்புகளையும் அவர் அங்கு நடத்துவார் என்று கூறப்படுகிறது. நேற்று நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திருந்த நிலையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 7 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற நிலந்த முணசிங்க உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் சந்தேகத்துக்குரிய மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் வீட்டுப் பாவனைக்கான கிணறு ஒன்றை தோண்ட முற்பட்ட வேளையில் இந்த மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
யாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.