இலங்கை அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமைக்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் ப்ரட் அடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், ப்ரட் அடம்ஸ் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இன்னும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விடயம் இன்னும் வாக்குறுதியாக மாத்திரமே தொடர்கிறது. இந்த சட்டத்தின் ஊடாக குற்றச்சாட்டுகள் இன்றி கைதுகளை மேற்கொள்ளவும், கைதாகின்றவர்களை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கவும் காவற்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

மேலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. குறித்த சட்டத்தின் கீழ் 80க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கமானது, பயங்கரவாத தடை சட்டத்தை நீங்கி, அதற்கு பதிலாக சர்வதேச தரத்தைக் கொண்ட மாற்று சட்டம் ஒன்றை உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று ப்ரட் அடம்ஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.