p1390853கடந்த 16.09.2016 இரவு ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்களிடம் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வர்த்தக சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மிகப்பெரியளவில் வங்கிகளில் கடன்பெற்று முதலீடு செய்தே இங்கு வியாபாரங்களை நடாத்தி வந்தோம். இப்போது எங்களால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. எனவே கடனை இல்லாமற் செய்வதற்கு வழிசெய்ய வேண்டும் அல்லது அந்தக் கடனைச் செலுத்துவதற்கு எங்களுக்கு ஒரு நீண்ட தவணையைப் பெற்றுத்தர வேண்டும். இந்த கடைகளை மீளக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமான காரியம். எனவே போதிய நிலப்பரப்பு இங்கு இருப்பதால் புதிய ஒரு சந்தைக் கட்டிடத்தை அமைத்துத் தரவேண்டும். புதிய சந்தைக் கட்டிடம் அமைத்துத் தருவதன்மூலமே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் காணமுடியும், அத்துடன் இந்த அழிவுக்கு எமக்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என்பவை அவர்களது கோரிக்கைகளாக அமைந்திருந்தன. விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்தக் கோரிக்கைகளை உரிய இடங்களில் முன்வைத்து இவைகளை நிறைவேற்றுவதற்கான முழுமையான அழுத்தத்தைக் கொடுப்பதாக வர்த்தகச் சங்கத்தினரிடம் தெரிவித்தார். கடந்த 16.09.206 அன்றிரவு 9 மணியளவில் கிளிநொச்சி சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் பழக்கடைகள், புடவைக் கடைகள் என அனைத்தும் முற்றாக எரிந்து அழிவடைந்தன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

p1390840 p1390841 p1390855 p1390860