பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிஷா பிஸ்வால் சிங்கப்பூரில் சந்திப்பு-

ranil nisha metசிங்கப்பூரில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது, தற்போதைய அரசியல் நிலமை, பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டி – கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பொரளாதார வலயத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்க்கையை சுமுகநிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்டகால மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்போதுள்ள இணக்க அரசின் நல்லாட்சிக்கு நிஷா பிஸ்வால் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மக்களின் சிறப்பு மற்றும் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வால் கூறினார் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து-

kksயாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில் இன்று அதிகாலை 5.30; மணியளவில் காங்கேசன்துறையில் தண்டவாளத்தை விட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றிருந்த குறித்த புகையிரதம் இன்றுகாலை 6.30மணிக்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்படுவதற்காக காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு 5.30 அளவில் பயணித்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி (பிரேக்) செயலிழந்தமையே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதேவேளை சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும், விபத்து குறித்த விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான ரயிலின் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.