Header image alt text

இந்திய படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்-

jaffnaஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்றுகாலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட மீனவர்களினால் யாழ். கடற்தொழிலாளர் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் சமாசங்களைச் சேர்ந்த மீனவச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் யாழ்.ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்திற்குச் சென்று அரச அதிபர் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றை கையளித்து அதன்பின்னர் இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்று துணைத்தூதுவர் நட்ராஜிடம் மகஜர் ஒன்றும் கையளித்துள்ளனர்.

யாழ். நீதிமன்றத் தாக்குதல், மூவர் பிணையில் விடுதலை-

jaffna courtsயாழ். நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரையும் தலா 5 லட்சம் பெறுமதியான 5 ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் ஏனைய 18 நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தக் கோரி யாழ். நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின்பேரில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு ஜேர்மன் ஒத்துழைப்பு-

germanyஇலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜேர்மன் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகருக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி கட்டட தொகுதியை பார்வையிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜேர்மன் அமைச்சர், தமது அரசாங்கம் இலங்கையில் 11 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்துவருவதாக கூறியுள்ளார். தேசிய திறன்விருத்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, வட மாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, ஜேர்மன் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் தாம் மீண்டும் ஜேர்மனுக்கு சென்ற பின்னர் இலங்கை வெள்விவகார அமைச்சுடன் இணைந்து ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொடுப்தற்கு தேவையான நடவடிக்கையெடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

சிறுமியர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பேரணி-

arpattamசிறுமியர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பால் நிலை வன்கொடுமைகளைக் கண்டித்தும், வித்தியா, ஜெருஷா, சேயா போன்ற வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியர்களுக்கு நீதி கோரியும், பெண்கள் சிறுமியர்களுக்கான பாதுகாப்பை வேண்டியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தாய்மார் மற்றும் பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் அண்மைய வாரங்களில் இத்தகைய பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள பெண்கள் அமைப்பினர், மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் வேலைத் தளங்கள், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களிலும் பெண்களினதும் சிறுமியர்களினதும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

சஜின் டி வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை-

sachin vassமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. சஜின் டி வாஸ் குணவர்தன தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்கள் சிலவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சஜின் டி வாஸ் குணவர்தன கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 200 இலட்சம் ஷரூபா சரீரப் பிணையிலும், 10 இலட்சம் ஷரூபா ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றத் தடுப்பு திணைக்களத்திற்கு பிரசன்னமாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் பட்சத்தில், சஜின் டி வாஸ் குணவர்தனவை மீண்டும் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்;, சந்தேகநபர் காயம்-

gun shootingகொழும்பு, கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடுவலை ரணால பகுதியைச் சேர்ந்த 32 வயதான குறித்த சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். சமயா என்றழைக்கப்படும் கருண உதயங்க எனும் இந்த சந்தேகநபருக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் மூன்று வழக்குகள் கொலைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பதில் அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்-

asst ministersருவன் விஜேவர்த்தன மற்றும் அநுராத ஜயரத்ன ஆகியோர் பதில் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தனவும் பதில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அநுராத ஜயரத்னவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்-

ananthiவன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்றுகாலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more

மறுக்கப்பட்ட திருவிழா நிகழ்வு, வடலியடைப்பு கிராம மக்கள் கையொப்பமிட்டு மகஜர் சமர்ப்பிப்பு-

2யாழ். வடலியடைப்பு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் இரவு நேர பூங்காவன நிகழ்வின்போது அங்கு வருகை தந்திருந்த காவல்துறையினரால் குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு பல இலட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வுகளும் இரத்துசெய்யப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்தால் கைதுசெய்ய நேரிடும் என்று பொலிஸார் எச்சரித்துமுள்ளனர். இதன் காரணமாக பரிசில் பெற வந்த சிறார்கள் மனவேதனை அடைந்தது மாத்திரமன்றி வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் உள்ளுர் கலைஞர்களை நிகழ்விற்கு அழைத்து அவர்களை அவமானப்படுத்தியபோல் இது அமைந்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் ஆலய பிரதம குரு, விழாவின் உபயகாரர்கள், பொதுமக்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இவ்விடயத்தை உடன் இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் அக் கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கு நீதி வேண்டி கையொப்பமிட்டு பல தரப்பினருக்கு மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.

கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-

4567676மட்டக்களப்பு, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடதாசி ஆலையில் இருந்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய படியே, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபரிடம் கையளித்தனர். அவர் குறித்த மகஜரை மேலதிக நடவடிக்கைக்காக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்தார். இதேவேளை இவ் ஊழியர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென்றும் இதனால் இவ் ஊழியர்களின் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கூட வசதி வாய்ப்பின்றி மிகவும் கஷ்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் அல்லது சுயவிருப்பில் அல்லாது கட்டாய சுயவிருப்பில் தங்களை அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கைகள் விடுக்கின்றனர். 

சஜின் வாஸ் குணவர்தன, பிரேமலால் ஜயசேகர விளக்கமறியல்-

sachin vasspremlalமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 06ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்-

oathபாராளுமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள், இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஐ.தே.கட்சி பாலித்த தேவரபெரும, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மகனின் இழப்பு காரணமாக புதிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்த அன்று பாலி;த தேவரப்பெருமவால் கலந்துகொள்ள இயலவில்லை. மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சரத் சந்திரமாயாதுன்ன இராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிமல் ரத்நாயக்க அக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் பொறுப்பேற்றார். அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் மூவருமே இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 

மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாது-மனித உரிமை ஆணைக்குழு-

deadஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாதென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனை தீர்வாக அமையாதென சர்வதேச ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு செயலாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். மேலும் சமூக, பொருளாதார, கலாசாரம் உள்ளிட்ட காரணிகளே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதென குறிப்பிட்ட அவர், அதற்கான காரணிகளை கண்டுபிடித்து தீர்வை பெறவேண்டுமே ஒழிய அதற்கு மரண தண்டனை தீர்வாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்த்து வந்த காரணத்தாலேயே மரண தண்டனை, கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமுல்படுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டோர் சார்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாராளுமன்ற அனுமதியை பெற்று மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

தனுஸ்கோடி தலைமன்னார் பாதை அமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை-

thanuskodiதனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 5.19 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் இந்த முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தபோது பல்வேறு தரப்பாலும் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்த செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளன. 22 கிலோமீற்றர் நீளமான இந்த பாதை, பாலங்கள் மற்றும் கடல்அடி சுரங்கங்கள் ஊடாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்கு குழு நியமனம்-

genevaஇலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கையை ஆய்வுக்குட்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பு குறித்தான அறிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள தேர்ச்சிபெற்ற சட்டத்தரணிகளின் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் தீர்மானங்களை அறிவிக் முடியும் என பிரதி அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். உள்ளக பொறிமுறைகளுக்கு விசேடமாக சர்வதேச நுட்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். எனவே குறித்த அறிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையை சார்ந்த சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் பிரதி அமைச்சர் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை ஜெனீவாவிற்கு சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். Read more

பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அகழ்வு-

policeகிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 9.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் அகழ்வு செய்;வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.