Header image alt text

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-(படங்கள் இணைப்பு)

IMG_3110முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு, நல்லகண்டல், வசந்தபுரம், மாந்தளன், கள்ளப்பாடு, வண்ணாங்குளம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், கந்தையா சிவநேசன்( பவன்) ஆகியோர் அவர்களுக்கான உலருணவு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களுடைய மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

Read more

யாழ்.வட்டு, கார்த்திகேய வித்தியாலய 120ம் ஆண்டு பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

P1100448யாழ். வட்டுக்கோட்டை கர்த்திகேய வித்தியாசாலையின் 120ம் ஆண்டினை நினைவு கூறும் வகையில் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தாhர்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சங்கானைக் கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சூ.நோபேட் உதயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக பாடசாலையின பழைய மாணவியும், வலிகாமம் கல்வி வலய அழகியல் பாடத்துறை உதவிக்கல்விப் பணிப்பாளருமான திருமதி. ஜெகதீஸ்வரி அருள்மயம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் பாடசாலை கல்விச் சமூகத்தின் விசேட அழைப்பின் பேரில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுப்பதில்லை-

foriegn ministryதீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கைப் பிரஜைகளை பிற நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எந்தவொரு பயண எச்சரிக்கையும் விடுக்கப்போவதில்லை என, வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சின் அதிகாரி, அண்மையில் தீவிரவாதிகளால் பாரிஸ் மற்றும் மாலி போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறினார். இலங்கைப் பிரஜைகள் விடுமுறைக் காலங்களில் எந்தவொரு நாட்டுக்கும் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு பிரஜைகளுக்கு நேற்று அமெரிக்கா உலக அளவில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஏழு பொலிஸார் மாற்றம்-

policeபாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை ஆணைக்குழுவில் கடமையாற்றிய 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் அவர்கள் சேவை செய்த இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை-

rajithaதம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுமே இவர்கள் இந்த கடித்தத்தை வழங்கியுள்ளனர்.

கனடாவில் இந்து கோயிலுக்கு எதிராக வழக்கு-

canadaகனடா டொரன்டோவில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பிராந்திய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த தகவல் வெளியானதாக த நெஸனல் போஸ்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது. குறித்த கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் ஒருவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என கூறி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்நது. இதன்போது குறித்த கோயில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளின் ஆதரவு அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தால் நிறுவகிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டினர் எனினும் இதனை மறுத்துள்ள ஸ்காப்ரா கோயில்களின் பணிப்பாளர் தனபாலசிங்கம் குறித்த கோயிலுக்கு கனடாவில் தடை செய்யப்பட்டவர்கள் வந்து செல்வதால் அதனை அவர்களின் நிறுவகத்துக்கு உரியது என கூறுவது ஏற்க முடியாதென கூறியுள்ளார்.

தமிழ் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்: மூவர் புனர்வாழ்வு கோரிக்கை-

jailபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் 5 தமிழ் கைதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு வேறு வழக்குகளின் கீழ் 5 தமிழ் கைதிகளும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும் சந்தேகநபர் தொடர்பில், பதவிய நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு காணப்படுவதால் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இதேவேளை, மற்றைய ஒருவரின் புனர்வாழ்வு கோரிக்கை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய மூன்று தமிழ் கைதிகளும் புனர்வாழ்வு பெறுவதற்கு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய, தமிழ் கைதிகளின் கோரிக்கை குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என கைதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பொன்னுத்துரை கிரிஷாந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர் கடமை பொறுப்பேற்பு-

ga vavuniyaவவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ரோஹன புஸ்பகுமார இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதவி ஏற்பு நிகழ்வில் முன்னாள் அரசாங்க அதிபரும் கலந்து கொண்டிருந்தார். புதிய மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர்கள் வைபவ ரீதியாக அழைத்து வரப்பட்டதுடன் சர்வமத பிரார்த்தனைகளின் பின்னர் முன்னாள் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர பொறுப்புகளை புதிய அரசாங்க அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு புதிய அரசாங்க அதிபரை வரவேற்றனர். ரோஹண புஷ்பகுமார சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக இருந்து வவுனியாவிற்கான புதிய மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நிஷாந்த தனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்த்தை ஏற்படுத்துவது அவசியம்-சந்திரிகா-

chandrikaபிளவுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு அவசியமானது என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது. பாடசாலைகளும் இரண்டு சமூகங்களுக்கும் வெவ்வேறாக உள்ளன என இதன்போது சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஆங்கில மொழிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தால் அது இரண்டு சமூகங்களுக்கும் இணைமொழியாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது வாழ்வில் மிகவும் ஆபத்தான கட்டம் ஒன்று இருந்ததாகவும் அவர் இதன்போது நினைவுகூர்ந்தார். எனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. எனது வீடு கண்காணிக்கப்பட்டது. பெரும்பாலான மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டது, இவை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் மாற்றமடைந்துள்ளன என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் குறித்து வினவப்பட்டபோது, ஆண்களுக்கு நிகராக பெண்கள் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அரசியலில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு இல்லை, ஆனால் புதிய அரசாங்கம் குறைந்தது 25 வீதமாவது தேர்தலில் பெண்கள் போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமந்தா பவர் சந்தித்துப் பேச்சு-

samantha tnaஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சிகைள் மற்றும் மீள்குடியேற்றம் என்பன தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்-மலேசிய எதிர்க்கட்சிகள்-

modiஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மலேஷிய தலைநகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம் இலங்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மேம்படுவதற்கு இந்தியா அழுத்தம் விடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இதன்போது வலியுறுத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இதயசுத்தியுடன் நிறைவேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அதனை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமு எனவும் மலேஷிய தலைவர்கள் கோரியுள்ளனர். அத்துடன் நீண்டகாலமாக சிறைச்சாலையில் வாடும் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பிலும் மோடியிடம் விவாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.எல்.பீரிஸ் மீது நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு விசாரணை-

GL peerisமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணை பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 1மணியளவில் முன்னாள் அமைச்சர் விசாரணை பிரிவிற்கு ஆஜராகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான நேரடி பஸ்-

busதிருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. சேருவிலையில் முற்பகல் 11 மணிக்கு தயாராகும் பஸ் மூதூரிலிருந்து நண்பகல் 12 மணிக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென்று இலங்கை போக்குவரத்து சபையின் மூதூர் சாலை முகாமையாளர் ஏ.எல் நௌபீர் குறிப்பிட்டிருந்தார். மேலும் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நண்பகல் 01 மணிக்கு மூதூருக்கான பஸ் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். 350 ரூபா போக்குவரத்து கட்டணத்துடன் சாதாரண சேவை இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தோழர் சுப்புவுக்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)

P1110231தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதி தோழர்களால் அமரர் தோழர் சுப்புவுக்கு தோழர் சின்னக்குமார் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் சுழிபுரம் பகுதியில் கடந்த (08.11.2015) அன்றுமாலை நடைபெற்றது. முன்னதாக இவ் நிகழ்வின்போது தோழர் சின்னக்குமார் அவர்கள் அமரர் தோழர் சுப்புவின் திருவுருவப்படடத்திறற்கு மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து ஏனைய கழகத்தின் மூத்த தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வின் பின்னர் அஞ்சலி உரையினை தோழர் ஜெகநாதன் (ஜேர்மனி), புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாhளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தொலைபேசி ஊhக இரங்கல் உரையினை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் அமரர் தோழர் சுப்புவின் நினைவாக சுழிபுரம் பகுதியில் தோழர் அன்டனி அவர்களின் தலைமையின்கீழ் 500பனை விதைகள் நாட்டத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. Read more

சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-

samantha_maiththiri_001ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர், இதனை ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகுமென குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்ததாகும். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை பாராட்டுகின்றேன். அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகமின்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட தூதுவர், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியுமெனத் தெரிவித்தார். இலங்கையின் புதிய வேலைத்திட்டம் பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
Read more

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

20151122_180931ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று தோழமை தினம் இடம்பெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களாலும், ஈ.பி.ஆர்.எவ்.எவ்-பத்மநாபா கட்சியினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களது தலைமையில் இன்றுமுற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிவரையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறீகாந்தா, முருகேசு சந்திரகுமார், வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), ஜி.ரி. லிங்கநாதன் (விசு), வட மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராஜா ஆகியோரும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இங்கு உரையாற்றிய அனைவரும், தமிழ் கட்சிகள் மத்தியிலே குறைந்தபட்சம் ஒரு ஒற்றுமைப்பாடு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற தொனியில் உரையாற்றினார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதி திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

20151122_092105யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கான கட்டிடம் இன்றுகாலை பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ. லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான், டீ சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பீ.எஸ்.எம் குணரத்ன, அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றும்போது, யாழ் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சிக்கும், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கும் மேலதிக நிதியினை ஒதுக்குவதாக தெரிவித்தார். Read more

சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பெயர்கள் தம்மிடமிருப்பதாக யாஸ்மின் சூக்கா தெரிவிப்பு-

jasmni xookaதிருகோணமலையில் இருப்பதாக கூறப்படும் இரகசிய சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த விபரங்கள் தங்களிடம் இருப்பதாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் கள் சூக்காவின் தலைமையிலான தன்னார்வ குழு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இயங்கும் இலங்கையின் நீதி மற்றும் உண்மைக்கான வேலைத்திட்டம் என்ற இந்த அமைப்பு இதனைக் கூறியுள்ளது. குறித்த அதிகாரிகளே கைதுசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களை இந்த சித்திரவதை முகாமிற்கு மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. திருமலையில் செயற்பட்டு வந்த குறித்த முகாம் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தகவல் வெளியிட்டிருந்தது. இம் முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்களின் ரத்தத்தினால் முகாமின் சுவரில் எழுதி வைத்திருப்பதாகவும் குறித்த செயற்குழு கூறியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மூவர்; கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமந்தா பவர் அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்பு-

ertrtஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். மேலும் இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தபின் நேற்றுமாலை சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் அவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

arrestஅதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் பயணித்தவரை, எல்ல-வெல்லவாய வீதி, ராவனா எல்ல பகுதியில் வைத்து பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரிடமிருந்து வோடர் ஜெல் ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 700 கிராம் வெடிமருந்து, ஜெலிட்னைட் குச்சிகள் 5, 6 கிலோகிராம் 250 கிராம் அமோனியம் நைட்ரைட், 64 அடி நீளமுள்ள சேவா நூல் -2, டெடனேட்டர் 10 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் 6ஆவது கடல் சார் மாநாடு நாளை ஆரம்பம்-

34445இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள 6 ஆவது சர்வதேச கடல் சார் மாநாடு நாளை முதல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை காலியில் நடைபெறவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 4 கடற்படை தளபதிகள் பங்கேற்கவுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 37 நாடுகள் 10 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.