anurathapuram-jailஅனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மீதான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இந்த தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடன், சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்தவாரம் அறிவித்திருந்தனர். புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுதல் அல்லது தமக்கு எதிராக அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை வட மாகாண நீதிமன்ற எல்லைக்குள் மாற்றிக்கொள்வதற்காக கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு மஹஜர் அனுப்பியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.