இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் இன்றுகாலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
ரயில்வே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மேலதிக சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபை வழமையாக 5,400 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது.
வாக்காளர்களை பதிவு செய்யும் நடைமுறைக்கு அமைய, ஒரு வீட்டின் பிரதான குடியிருப்பாளர்கள் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை கையளிக்கும்போது, அதனை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டை, கிராம சேவகர் வழங்குவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்தது.
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து மாற்றுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளதாக இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.