ranilநாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் குழுநிலை விவாதம் இன்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் பாராளுமன்றம் உள்ளிட்ட மேலும் 22 விடயங்கள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.எதிர்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகக் காலப்பகுதியில் ஆயிரத்து 200 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. பெரும் எண்ணிக்கையிலான வாகனங்களை எந்த நோக்கத்திற்காக செயலகம் கொண்டிருந்தது? என்பதும், இவற்றில் எத்தனை வாகனங்கள் பயன்படுத்த முடியாதிருக்கின்றன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

இக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் செயலகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த அலுவலகங்களின் உணவுக்கான செலவு 15 கோடி ரூபாவாகும் என்றும் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில், நாட்டில் இனங்களுக்ககிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அனைவருக்கும் ஒரே வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிவ் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்ததாகும். இதற்காக ஜனாதிபதி அர்ப்பணித்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

தேசிய ஐக்கியத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதனை சீர்குலைப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர். இதனை தோற்கடிக்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவதைப் போன்று வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தற்போதிலும் பார்க்க வசதிகள் கிடைக்க வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.