land slideமண்சரிவு அபாயம் ஏற்பட்டகூடிய ஐந்து மாவட்டங்களில், பாரிய அபாய வலயங்களுக்குள், 2,264 குடும்பங்கள் உள்ளன. அக்குடும்பங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதில் ஆணையாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ, கருத்து தெரிவிக்கையில், “மண்சரிவு அபாய வலயங்கள் தொடர்பிலும், அவற்றுக்கான பரிந்துரைகள் தொடர்பிலான அறிக்கைகள், பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார். “அதனடிப்படையில், ஆகக்கூடிய அபாய வலயங்கள், இரத்தினபுரி மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் மட்டும் 1,312 வலயங்கள் உள்ளன ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இரத்தினபுரி மாவட்டத்தில், 2017 நடுத்தர அபாய வலயங்களும், சிறிய அபாய வலயங்கள் 1,400 உள்ளன. இதேவேளை, கேகாலை மாவட்டத்தில், மண்சரிவு ஏற்படக்கூடிய, அதிகூடிய அபாய வலயங்கள் 80 இனங்காணப்பட்டுள்ளன. நடுத்தர அபாய வலயங்கள் 236 இனங்காணப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிகூடிய அபாய வலயங்களாக, 243 வலயங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்விரு மாவட்டங்களிலும், 758 நடுத்தர அபாய வலயங்களும், சிறிய அபாய வலயங்கள் 195 உம் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“காலி மாவட்டத்தில், மண்சரிவு அபாயமிக்க, அதிகூடிய அபாய வலயங்கள் 108 இனங்காணப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில், இனங்காணப்பட்ட நடுத்தர அபாய வலயங்கள் 268 ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார். “இதேவேளை, இந்த மாவட்டத்தில், குறைந்த அபாயம் கொண்ட வலயங்கள் 23 உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆகையினால், இனங்காணப்பட்டுள்ள, அதிகூடிய அபாய வலயங்களுக்குள் வாழ்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்” அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அப்புறப்படுத்தும் மக்களை, மீள் குடியேற்றுவதற்காக, 200 இடங்கள் தொடர்பிலான விவரங்களை, பிரதேச செயலாளர்கள், தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடம் கோரியுள்ளனர். அதில், 160 இடங்கள் மட்டுமே, தற்போதைக்கு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

“இதேவேளை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களில், 70 சதவீதமானவை தொடர்பில், பிரதேச செயலாளர்களுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்றும் தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதில் ஆணையாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.