bavanவடக்கில் உள்ள பௌத்த விகாரைகள் அழிக்கப்படுகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மோதல்கள் வலுப்பெற்று வருகின்ற நிலை தென்னிலங்கையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

பௌத்த மதம் சிங்கள மொழிபேசும் இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்கின்ற போதிலும் இலங்கையில் உள்ள சிங்களவர்களால் பௌத்த விகாரைகளும், புத்த சிலைகளும் நில ஆக்கிரமிப்பின் சின்னமாகவும், தமிழின அழிப்புக்கு அதாரமாகவும் பயன்பட்டு வந்தமையே கடந்தகால கசப்பான வரலாறாகும்.

இருந்தபோதிலும் வடக்கே நாகவிகாரை முதல் தெற்கே பொத்துவில் விகாரை வரை தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அநேகமான விகாரைகள் தமிழர்களால் வழிபாட்டு இடங்களாகவும், மரியாதைக்குரிய இடங்களாகவும் மதிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். அதேநேரத்தில் அந்தந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படுகின்ற விகாரைகள் கூட இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை பயன்படுத்தி பாதுகாப்பு, பௌத்த வளங்கள் என அனைத்தை வழிகளிலும் நாளும் பொழுதும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

சில சமயங்களில் நீதித்துறை உத்தரவுகளை உதாசீனம் செய்தும்கூட அரச பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் விகாரைகள் உருவாக்கப்படுகின்றன.

கடந்த பல தசாப்தமாக, யுத்தத்தினை காரணம் காட்டி வடகிழக்கு பிரதேசங்களின் மூலை முடுக்குகளிலும் குவிக்கப்பட்டிருந்த படையினரின் அனைத்து நிலைகளிலும் வழிபாட்டுக்காக சிறிதும் பெரிதுமாக அமைக்கப்பட்டு பின்னர் முகாம்களும் சோதனைச்சாவடிகளும் கைவிடப்படிகின்ற தருணங்களில் அநாதரவாக காணப்படுகின்ற புத்தர் சிலைகளே இன்று பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றன என்பதை பௌத்த மத தலைவர்களும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளும் முதலில் உணர வேண்டும்.

99% பௌத்தர்களால் நிரப்பபட்டுள்ள அரச படையினரின் முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் வழிபாட்டுக்காக புத்தர் சிலைகள் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்படும் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் படையினர் தமது நிலைகளை விட்டு வெளியேறும் போது சகல உடைமைகளையும் மிச்சம் மீதமின்றி வழித்துத் துடைத்து எடுத்து செல்கின்ற நேரத்தில்கூட புத்தர் சிலைகளை மட்டும் விட்டுச்செல்கின்ற கபடத்தனமான நோக்கத்தினையும் அதன் காரணங்களையும் கூட எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தனியாருக்கு குறிப்பாக தமிழருக்கு சொந்தமான காணிகளில் தற்காலிகமாக வைக்கப்பட்ட சிலைகளை திட்டமிட்டு விட்டுச்செல்வது அந்தப் பகுதிகளை பௌத்தமயமாக்கி எதிர்காலத்தில் பௌத்த பாரம்பரிய பிரதேசங்களாக அடையாளம் காட்ட முனைகின்ற இழிவான சிங்கள மேலாதிக்க சிந்தனையை தவிர வேறொன்றுமில்லை. குறிப்பாக அச்சிலைகள் பாரம்பரியமின்றி பழுதடைவதால் எழக்கூடிய முரண்பாடுகளை கூட தமது கேடான பேரினவாத அரசியலுக்கும் படையினரின் வழிந்த பிரசன்னத்திற்கும் காரணமாக பயன்படுத்த முனையும் ஆபத்தான தமிழின அழிப்பு மனநிலையே தென்னிலங்கை சிங்கள அரசியலில் கட்சிபேதமின்றி பரவிக்கிடக்கின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட படை அதிகாரிகள் தாம் பலவந்தமாக கைப்பற்றி வைத்திருந்த தமிழர் காணிகளை விட்டு வெளியேறும்போது தமது உடைமைகளுடன் வழிபாட்டுக்கு வைத்திருந்த புத்தர் சிலையையும் எடுத்துச்செல்லப்படுவதே பொருத்தமான நடைமுறையாக இருக்கும் என்றும் அதனை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றோம் .

ஆக்கிரமிப்புச் சின்னங்களாக பார்த்துப் பழக்கப்பட்டு விட்ட புத்தர் சிலைகளை வழிபடக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய மனநிலையில் இன்று நம் தமிழர்கள் இல்லை. அவ்வாறான மனநிலைக்கு தமிழர்கள் வர பௌத்த பேதங்களும் சிங்கள அரசியல் தலைமைகளும் அமைத்துக் கொடுக்கவும் இல்லை, இனிமேல் கொடுக்கப்போவதுமில்லை. அதேநேரத்தில் எமது சொந்தக் காணிகளில் அத்துமீறி நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகளை தன்னிச்சையாக அகற்றுவதற்குரிய தைரியமோ, அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முகம் கொடுக்கக்கூடிய வலிமையோ தமிழர்களுக்கு கிடையாது.

எனவே படையினர் தமது பொருட்களுடன் தற்காலிக வழிபாட்டுக்கு பயன்படுத்தி வந்த புத்தர் சிலைகளையும் எடுத்திச் சென்று கானிகளை உரிமையாளருக்கு திருப்திகரமான முறையில் கையளிப்பதே நல்லெண்ணச் செயற்பாடாக அமைய முடியும். இல்லையெனில் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட பகுதிக்குரிய அரச நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் அச்சிலைகள் அகற்றப்பட்டு காணிகள் பொதுநிலங்கள் சம்பத்தப்பட்ட உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட வேண்டும். இது ஒன்றே புத்தர் சிலைகளால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் முரண்பாடுகளை களைய ஒரே வழியாகும்.

புத்தர்சிலை என்பது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமல்ல என நிறுவ நேர்மையான, உண்மையான பௌத்தர்கள் விரும்புவர் அதற்கும் இதுதான் வழியாகும்.

க.சிவநேசன்,
மாகாண சபை உறுப்பினர்,
வடக்கு மாகாணம்.
12.09.2016.