ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்த வேளையில், வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தியதை தொடர்ந்து, தாம் யார் என பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் அடையாளப்படுத்தியதுடன் கைதுசெய்த நபர்கள் இருவரையும் அவர்களுக்குச் சொந்தமான ஹயஸ் வாகனத்தினையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தினை அறிந்த இவர்களின் சகோதரன் யாழ். மருதனார்மடம் பகுதியில் நின்ற போது, அப்பகுதியில் வந்த பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினரின் ஹயஸ் வாகனத்தினை மறித்து பிரச்சினையில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் திரண்டு சம்பவத்தினைப் பார்த்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரின் சகோதரனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் ஆகிய இருவரையும் ஹயல் வாகனத்தினையும் பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர்.
இன்று மற்றும் நேற்று ஆகிய இரு நாட்களில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான கைது நடவடிக்கையினால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகின்றது.