ஸ்பெயினிலிருந்து விடுபடுவதற்கான வாக்கெடுப்பை கெட்டலோனியா பாராளுமன்றம் நடத்தியுள்ளது. இதன்படி, சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் அரசாங்கம் நேரடி ஆட்சியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தமையால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.பிந்திய செய்திகளின்படி….
கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரப் பிரகடனம் செய்த சில மணி நேரங்களில், கட்டலோனியாவை ஸ்பெயின் அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டலோனியாவில் பதவி வகித்த பொலிஸ் உயரதிகாரிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டலோனியாவில் நேற்று நடத்தப்பட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகின. இதையடுத்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றதாகவும், கட்டலோனிய அரசவை சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பிரகடனத்தையடுத்து கட்டலோனிய மாகாண முதலமைச்சரைப் பதவிநீக்குவதாகவும், மாகாண அரசை கலைப்பதாகவும் அறிவித்த ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், உடனடியாக அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து சுதந்திரத்துக்கு ஆதரவான ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், சுதந்திரத்துக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.