wdere

maithriஇலங்கையில் இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபருக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய கலந்துரையாடல் மற்றும் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சட்டம், ஓழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்கா, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ , மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்திற்கு சிறுபான்மை இன அமைச்சர்களான ரிஸாத் பதியுதின் , ரவுப் ஹக்கீம் , டி. எம் . சுவாமிநாதன் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் இம் முறை அழைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த மதகுருவொருவரால் மேற்கொள்ளப்பட்ட இனவாத செயல்பாடுகள் உட்பட தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதிரான அண்மைக்கால இனவாத செயல்பாடுகள் குறித்து சிறுபான்மை இன அமைச்சர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து இனவாத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியினால் போலீஸ் மா அதிபதிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

முகநூல் கணக்குகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப முறை ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரது செயலாளருக்கு ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

‘புதிய சட்டம் வரும்வரை இருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி பொலிஸ் மாதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.’ என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டமூல வரைவு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என இது குறித்து நீதி அமைச்சர் விஜேதாசராஜபக்ஷ விளக்கமளித்தார்.