busமுறையான அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஆபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றவும், தரமான பஸ் போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்யவும், தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் வெளியிடப்பட்ட, அனுமதிக்கப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இன்றி பஸ்களை செலுத்துவோருக்கு எதிராக நீதிமன்றங்களின் மூலம் தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த அபராதத் தொகையை 10,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் விதிமுறைகளை தயாரித்து 1991ம் ஆண்டு 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள “தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்ட மூலத்தை” அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.