bavan..0பொதுச் செயலாளர்,

இலங்கை ஆசிரியர் சங்கம்.

அன்புடையீர்,

கடந்த 06.10.2017 அன்று வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த, பாடசாலைகளுக்கிடையேயான சமச்சீரற்ற வளப்பங்கீடு சம்பந்தமான பிரேரணை மீதான விவாதத்தின் போது, நான் மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்திருந்த கருத்துக்களின் ஒரு பகுதி மட்டும் அரைகுறையாக,  எனது யோசனைகள்,  தீர்வு எனும் தலைப்பில்,  எனது எண்ணத்திற்கு முற்றிலும் பாதகமான முறையில் பத்திரிகை ஒன்றில் ஓரிரு தினங்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதையிட்டு எனது கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்ய முதலில் விரும்புகிறேன்.

குறிப்பிட்ட பத்திரிகை இவ்வாறான, உள் நோக்கத்துடனான செய்திகளை வெளியிட்டு வருவதில் எனக்கு ஆச்சரியமெதுவுமில்லை. பத்திரிகைத் துறையின் மாண்புகளை மலினப்படுத்தி, முழுமையான தகவல்களை வெளியிடாமல், தமக்குத் தேவையான விதத்தில் குறிப்பிட்ட பகுதி வசனங்களை பொறுக்கி செய்தியாக்கி தமது காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பண்புகளை இன்றும் நாம் பத்திரிகைத் துறையில் இடையிடையே பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். 

ஆனால் எனக்கு ஆச்சரியமான விடயம் என்னவெனில், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புகள்கூட மாகாண சபையில் விவாதிக்கப்படும் விடயங்களை முழுமையாக அறிய முற்படாமல், அதற்குரிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், அரைகுறை பத்திரிகை செய்திகளை நுனிப்புல் மேய்ந்துவிட்டு அறிக்கை விடுவதன் மூலம் தங்கள் இருப்புக்களை வெளிப்படுத்த முயல்வதுதான்.

ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர் நலன்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எதுவித கருத்து வேறுபாடும் கிடையாது. அதற்காக வட மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகவுள்ள வன்னி நிலப்பரப்பில் காணப்படும் கல்வித்துறையின் வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய நாம் எடுக்கும் நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை அறியாமல் எம்மீது மறுதலையான விமர்சனங்களை முன்வைப்பது அழகல்ல. எனது உரையை முழுமையாக கேட்டிருந்தால் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்ற அர்த்தத்திலே நான் அங்கு உரையாற்றவில்லை என்பது தெரிந்திருக்கும். 

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்திருந்த செய்திக் குறிப்பில் “வடக்கு மாகாணத்தில் கல்வி வீழ்ச்சி என்பது மாகாணசபை உருவாகிய பின்னர் ஏற்பட்ட நிலைமையே. இதனை நாம் இதுவரை வெளிப்படுத்தவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனது கருத்துக்களை, பிரச்சினைக்கான தீர்வு என்றும், யோசனை என்றும் அடிப்படை ஆதாரங்களின்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையோ தனது ஆசிரியர் தலையங்கத்தில், “வளச் சமச்சீரின்மைக்கு தெற்கைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் ஆளுனரின் தலையீடுமே காரணம் என்றும், வடக்கு மாகாண சபையை தமிழர்கள் முற்றுமுழுதாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரும் கூட பிரச்சினையை தீர்க்க வினைத்திறனான வழிவகையை அவர்களால் காண முடியாததற்கு அரசியல்தான் காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர்களை இடம் மாற்றினால் அவர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உடனடியாகவே தமது இடமாற்றத்தை திரும்பப் பெறுகிறார்கள் என்பதே எனது கருத்துக்களின் அடிப்படை என்பதனையும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டத் தவறவில்லை. 

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்டிருந்த பத்திரிகைக் குறிப்பின் பிரகாரம், இரண்டு வருட காலத்திற்கு முன்பு வடக்கு மாகாண அவைத்தலைவருடனும், மாகாணசபை உறுப்பினர்களுடனும் முன்வைத்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனில் இவ்வளவு காலமும் அதை பற்றிய எதுவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்காது மௌனமாக இருந்ததன் காரணம் தான் என்ன?

வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக பதவியேற்ற காலம்முதல் வன்னிப் பிரதேசத்தின் கல்வித்துறையின் மீள் எழுச்சிக்கு தேவையான, நடைமுறைச் சாத்தியமான, அதே நேரத்தில் மிகவும் இறுக்கமான முறையில் பேணப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி கல்விக்குழு கூட்டத்திலும், நேரடியாக முதல்வரிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவன் நான். 

ஆனாலும் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் அதிபர் ஆசிரியர்களின் பக்க சார்பான, மாணவர்களின் எதிர்காலம் கருதாத நடவடிக்கைகளால் சிறிய அளவில்கூட, வளப்பங்கீட்டில் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. 

அதீத ஜனநாயக பண்பு, அடிப்படை மனித உரிமை விவகாரங்களை முன்னிறுத்தி, ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திக்க மாகாணசபையில் முன்னெடுக்கப்படும் சகல விடயங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தபடி, சீருடை கழட்டிய படைத்தரப்பு ஆளுநரின் காலத்தில் கல்வி நிலை மேம்பட்டிருந்ததாக கூறப்படுவதன் பூரணமான அர்த்தம்தான் என்ன?

மிக அண்மையில்கூட புதிதாக நியமனம் பெற்ற 500 ற்குமதிகமான ஆசிரியர்களில் 150 பேர் வரையிலும் உடனடியாக தமது வதிவிடத்திற்கு அருகாமையிலான நகர்ப்புறங்களுக்கு, தவறினால் A தர வீதிகளுக்கு அண்மையான பாடசாலைகளுக்கு இடம் மாற்ற உத்தரவு வாங்கியுள்ளார்கள். 

இத்தனைக்கும் மத்தியிலும் சில ஆசிரியர்கள் தூர இடங்களிலிருந்து வந்து மிகவும் கஸ்டப் பிரதேசங்களிலே கடமையாற்றுவதையும் எங்களால் மறுக்க முடியாது. 

நியமனங்களை பெறும்போது பின்தங்கிய பகுதிகளில் கடமையாற்றுவதற்காக ஒத்துக்கொண்டு நியமனங்களைப் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக இடமாற்றம் பெறுகிறார்கள் என்றால் இது யார் தவறு? 

புதிதாக நியமனம் பெற்று வரும் ஆசிரியர்களால் தமது பகுதிப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். தமது பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காலாகாலமாக ஏமாற்றப்படும் மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளாக நாம் கூறக்கூடியதுதான் என்ன?

மாவட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப வெட்டுப்புள்ளிகளை அறிமுகப்படுத்தி,  பின்தங்கிய மாவட்டங்களின் வளப்பற்றாக்குறையை அந்தந்த மாவட்ட பரீட்சார்த்திகளைக் கொண்டே நிரப்புங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினாலும் அவை கணக்கெடுக்கப்படாமல் இருப்பது யாருடைய நலன்களைப் பாதுகாக்க?

அடிப்படை உரிமைகள் எனும் பெயரிலும் ஆசிரியர் நலன்களைக் காக்கிறோம் என்ற பெயரிலும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் அடிப்படை உரிமைகளை நீங்கள் உதாசீனம் செய்கின்றீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

எனது மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் சமூகத்துடன் நான்  மிகவும் நெருக்கமான, ஐக்கியப்பட்ட முறையில் செயல்பட்டு வருபவன் என்பதை எனது மாவட்டத்தின் கல்விச் சமூகம் நன்கு அறியும். அவர்களின் ஆதங்கங்களையும் பெற்றோரின் கவலைகளையும் வெளிப்படுத்தி நான் ஆற்றிய உரையில் தவறைக் கண்டுள்ள நீங்கள் மாகாண சபையில் நான் ஆற்றிய உரையின் முழுப் பகுதியினையும் வாசித்து ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

எத்தனை ஆசிரியர்களை நியமித்தாலும்,  அவர்கள் ஒரு எல்லைக்கு அப்பால் நகர்கிறார்கள் இல்லை, தூர இடங்களுக்கு செல்கிறார்கள் இல்லை, குடும்பத்தோடு இருந்து பணிபுரிய விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் ஏன் பின்தங்கிய மாவட்டங்களை காட்டி நியமனங்களைப் பெற்றுக்கொண்டு அந்த மாவட்டங்களின் மாணவர்களுக்கு துரோகமிழைக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறைதானா?

எனது மாவட்டத்தில் ஏராளமான பாடசாலைகள் ஆசிரியர் இன்றி அல்லாடுகின்றன. வசதியுள்ள பெற்றோர்கள் விரக்தியால் நகர்ப் புறங்களை நாடுகிறார்கள். வசதியற்ற மாணவர்கள் கல்வியறிவே இல்லாமல் ஆறாம் ஆண்டிற்கு வந்து சேர்கிறார்கள்.

இவற்றிற்கெல்லாம்,  ஆசிரியர் சங்கங்களும்கூட நடைமுறைச் சாத்தியமான தீர்வினை முன்மொழியலாம் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். வன்னியில் பின்தங்கிய மாவட்டங்களின், வலயங்களின் ஆளணி வளப் பங்கீட்டில் நியாயமான விதிமுறைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எந்த எல்லைக்கும் சென்று எனது ஒத்துழைப்பைத் தர தயாராகவுள்ளேன். இவ்விடயம் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் முல்லைத்தீவு மாவட்ட பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் நன்கு அறிந்த விடயம். நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

06.10.2017ல் நான் ஆற்றிய உரையில் முழுவடிவம் கிடைக்கப்பெற்றதும், அதன் பிரதியை தங்கள் அமைப்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்பதனையும் இத்தால் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.  

க. சிவநேசன்,

மாகாண சபை உறுப்பினர்

வடக்கு மாகாணம்.

10.10.2017

பிரதி:- பொதுச் செயலாளர், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்