armyஇந்த வருடம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் முதலாவது பொதுமன்னிப்புக் காலம், இன்று முதல் ஆரம்பமானது. குறித்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். 68ஆவது இராணுவ ஆண்டுப் பூர்த்தி நிகழ்வையொட்டி, இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கமைய, ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென, அவர் தெரிவித்தார்.  முப்படைகளில் இருந்து தப்பியோடியவர்கள், விடுமுறை இன்றி கடமைக்குத் திரும்பாத அதிகாரிகள், இந்தப் பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் சட்ட ரீதியில் பதவி விலகிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட விடயம், மருத்துவ பிரிவைச் சேர்தோருக்கு ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். முப்படைகளில் இருந்து அதிகாரிகள் உட்பட 40,000க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றுள்ளனரெனவும், பலர் விடுமுறையில் சென்று கடமைக்கு திரும்பவில்லை எனவும், படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.